Monday, May 27, 2013

நான் ரசித்த T.M.S.!

Posted by பால கணேஷ் Monday, May 27, 2013
Thirai isai Mannar Soundarrajan! இப்படித்தான சொல்லத் தோன்றுகிறது அந்த வெண்கலக் குரலுக்கு உரியவரை!
டி.எம்.எஸ். அவர்கள் பாடியது என்பதை அறியாமலேயே என் பள்ளிப் பருவத்தில் அவரது பாடல்களை ரசித்திருக்கிறேன் நான். அதிலும் அதிகமாக எம்.ஜி.ஆருக்காக அவர் பாடிய பாடல்களை. எல்லாமே என் ஃபேவரைட். ‘கட்டித் தங்கம் வெட்டியெடுத்து’, ‘காற்று வாங்கப் போனேன்’, ‘நான் ஆணையிட்டால்’ ‘கடலோரம் வாங்கிய காற்று’ இவை எல்லாம் அந்தச் சிறு வயதில் திரும்பத் திரும்பப் பாட வைத்து ரசிக்க வைத்த அவரின் ஹிட் பாடல்கள்.

பள்ளிப் பருவத்தில் இருந்து சற்றே வளர்ந்து உயர்நிலைப் பள்ளியை எட்டிய சமயத்தில் டி.எம்.செளந்தர்ராஜன் என்ற பாடகரின் பெயரும், அவரின் பிரபல்யமும் நன்கு புரிந்திருந்தது. அப்போது அவரின் நான் கேட்காமல் விட்ட பழைய திரைப்படப் பாடல்களைத் தேடித் தேடி கேட்கத் தொடங்கினேன். மிக ஆரம்ப காலத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பாதிப்பு டி.எம்.எஸஸின் குரலில் இருந்தது. பின்னால் அதை மாற்றி, தனக்கென தனிப் பாணி வகுத்துக் கொண்டார். அவர் பாடிய இந்த ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடி’ பாடலைக் கேட்டீர்களென்றால் அதை நன்கு உணர முடியும்.


 பட்டினத்தார், அருணகிரிநாதர் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். இந்த இரண்டில் ஏதோ ஒரு படத்தில் முருகப் பெருமானுக்கு முன்னால் ‘முத்தைத்திரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச்சரவண முத்துக்கொரு வித்துக் குருபர எனவோதும்’ என்று ஒரு பாட்டுப் பாடுவார் பாருங்கள்... அதை அவர் பாடுகிற அதே தெளிவான உச்சரிப்புடன், அவரைப் போலவே பாட வேண்டுமென்று நானும் பலமுறை கேட்டுக் கேட்டு பாடிப் பாடிப் பார்த்ததுண்டு. இன்று வரை தோல்விதான் கிட்டியிருக்கிறது. What a Legend!

டி.எம்.எஸ்ஸின் பாடல்களை எல்லாம் புரிந்து ரசிக்கத் துவ்ங்கிய அதே காலகட்டத்தில் எனக்கு அவர் மீது சிறுபிள்ளைத் தனமாக ஒரு குறையும் இருந்தது. சிவாஜிக்கு அருமையாகப் பாடும் டி.எம்.எஸ்., அதே அளவு எம்.ஜி.ஆருக்குப் பாடவில்லையோ என்பதுதான் அது. அதை ஒரு பதிவாகவும் எழுதி குட்டு வாங்கியதுண்டு நான். அந்தப் பதிவைப் படித்துவிட்டு ஒரு நண்பர் (பேரை குறிச்சுக்க மறந்துட்டேன்) டி.எம்.எஸ். பேசிய ஆடியோவை எனக்கு அனுப்பியிருந்தார். அதில் டி.எம்.எஸ். அவர்கள் கொடுத்திருக்கும் விளக்கம் எனக்கு மிகச் சரியாகப் பட்டது. அதை இந்தப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். கேட்டுப் பாருங்களேன்.... அனுப்பிவைத்த அன்பருக்கு என் மனம் நிறைய நன்றி!

எம்.பி.3 பாடல்களாக இன்று இசை கேட்கிறோம். அதற்கு முந்தைய காலகட்டத்தில் ஆடியோ கேஸட்டுகள் புழக்கத்திலிருந்தன. என் கல்லூரிப் பருவத்தில் ஆடியோ கேஸட்டுகள் அப்போதுதான் மார்க்கெட்டில் பரபரப்பாக ஆரம்பித்திருந்தன. அதற்கு முன் இசைத்தட்டுகளில்தான் பாடல்கள் கேட்போம். பெரிய சைஸ் தோசை மாதிரி இருக்கும் அந்த இசைத் தட்டை ஓடவிட்டு, ஒலிவாங்கும் ஊசியை அதன்மேல் வைத்தால் சுழன்று சுழன்று ஓடும் அதிலிருந்து பாடல்கள் கேட்பது பரமசுகம்! அப்படி ஒரு இசைத்தட்டில் முருகப்பெருமான் மீது டி.எம்.எஸ். பாடிய பக்திப் பாடல்கள் தொகுப்பு முழுவதையும் ரசித்து கண்கள் பனிக்க, மனம் உருகக் கேட்டிருக்கிறேன். ‘தித்திக்கும தேன்பாகும்’ , ‘கல்லானாலும் திருசசெந்தூரில் கல்லாவேன்’ ‘முருகனைக் கூப்பிட்டு’ போன்ற பாடல்களையெல்லாம் அவர் குரலில் கேட்கும் போதே மனதில் முருகப் பெருமானின் உருவத்தை உணர முடிந்ததுண்டு. எம்.பி.3யாக இவை கிடைக்குமா என்று தேடிக் கொண்டும்தான் இருக்கிறேன்.

சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் ‘பொன்மகள் வந்தாள்’ என்கிற டி.எம்.எஸ். பாடிய பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தார் ஏ.ஆர்.ஆர். இன்றைய பாடகரின் குரலில் ரீமிக்ஸிய அந்தப் பாடலில் ‘ராஜனாஆஆக’ ‘வீரனாஆஆக’ என்று ஹைபிட்ச் வரும் இடங்களில் டி.எம்.எஸ்ஸின் குரலையே பயன்படுத்தியிருந்தார். ‘‘ஹைபிட்ச்சில் பாட இன்னிக்கும் டி.எம்.எஸ். தான் தேவைப்படறான். இப்ப உள்ளவங்கள்ல யாருக்கும் அதைத் தொட முடியலை’’ என்று கருத்துச் சொல்லியிருந்தார் டி.எம்.எஸ். நிஜம்தான்! ‘எங்கே நிம்மதி’ என்று ஹைபிட்சில் பாடுவதானாலும் சரி, ‘யார் அந்த நிலவு’ என்று மென்மையாக இழைவதானாலும் சரி... டி.எம்.எஸ்.ஸின் குரல் எட்டுக் கட்டையைத் தொடுவதென்றாலும், இரண்டு கட்டையில் உருகுவதென்றாலும்.அனாயாசமாக சஞ்சரிக்கக் கூடியதுதான். எங்க ஊர்க்காரர் இவர் என்ற பெருமையும் எனக்குள் உண்டு.

தொலைக்காட்சிச் செய்தி அவர் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதாகச் சொன்னது. அந்தப் பத்தாயிரம் பாடல்களும் பலப்பல வானொலிகளிலும், தொலைக்காட்சியிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும் வரை அவருக்கு மரணமில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. எம்.ஜி.ஆர்., கண்ணதாசன் போன்றவர்களின் உடல் மறைந்தாலும் மக்கள் மனதில் நிலைத்திருப்பதைப் போலத்தான் டி.எம்.எஸ். பெயரும் மனதில் நிலைத்திருக்கும் என்பதே என் எண்ணம்.

1946ம் ஆண்டு தன் இசைப்பணியைத் துவங்கி மனங்களைக் கொள்ளையிட்ட அவர், 2013ல் மறைந்திருக்கிறார். ‘வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது’ என்றும், ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்றும் அவர் பாடிய பாடல்களைக் கேட்டுத்தான் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது!

சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆருக்காகப் பாடிய குரல் பற்றி டி.எம்.எஸ். சொன்‌னதை இங்கே க்ளிக்கி டவுன்லோடு செய்து கேட்கலாம் நீங்கள்!

56 comments:

  1. ‘முத்தைத்திரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச்சரவண முத்துக்கொரு வித்துக் குருபர எனவோதும்’ என்ற திருப்புகழ் பாடல் அருணகிரிநாதர் திரைப்படத்தில் திரு டி.எம்.எஸ் அவர்கள் பாடியுள்ளார்.

    திரு டி எம் எஸ் அவர்கள் பற்றி உங்கள் கருத்தே என் கருத்தும். கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வார்த்தையில் சொன்னால் ‘இவர் நிரந்தமானவர் அழிவதில்லை. எந்த நிலையைலும் இவருக்கு மரணமில்லை.’ எனலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஓ... அது ‘அருணகிரிநாதர்’ல தானா? சரியாத் தெரியாம தப்பா எழுதிரக் கூடாதேன்னுதான் பேர் குறிப்பிடலை. உங்களின் கருத்தும் என் கருத்தும் ஒத்துப்‌ போவதில் மகிழ்ந்து உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  2. அந்தப் பத்தாயிரம் பாடல்களும் பலப்பல வானொலிகளிலும், தொலைக்காட்சியிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும் வரை அவருக்கு மரணமில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது... /// உண்மை...

    ReplyDelete
    Replies
    1. ரசித்து ஆமோதித்த ப்ரியாவிற்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  3. எங்களின் மூத்தவர்...

    இவ்வுலகம் இருக்கும் வரை அவரது குரல் ஒலித்துக் கொண்டு இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் நண்பா! மிக்க நன்றி!

      Delete
  4. அற்புதமான குரலுக்குச் சொந்தக்காரர்... வாழ்க்கையில் எத்தனை இன்னல்களை எதிர்கொண்டாலும் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு வாழப்பழக்கிக்கொண்டிருக்கும் அருமருத்துவர்களில் முதன்மையானவர். டிஎம்எஸ் அவர்கள் பாடிய ஏராள பாடல்கள் கைவசம் இருந்தாலும் உங்களைப் போலவே நானும் கணவரும் இதுவரை கேட்டிராத அவருடைய பல பாடல்களைத் தேடித்தேடிக் கேட்டு ரசித்துக்கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. என் கருத்துக்களுடன் அப்படியே ஒத்துப் போவதாக இருக்கிறது உங்கள் கருத்தும். மிக்க மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  5. நாமெல்லாம் டி.எம்.எஸ்ஸின் தமிழ்ப்பால் குடித்து வளர்ந்த பிள்ளைகள்.
    இப்போது வளரும் பிள்ளைகள் கதியைப்பாருங்கள்...
    ‘மாமா...டவுசர் கழண்டுச்சே...

    \\\‘கல்லானாலும் திருசசெந்தூரில் கல்லாவேன்’\\\
    இந்த வரிகள் தவறானவை.
    ‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்’ என்பதே சரி.

    ReplyDelete
    Replies
    1. அந்தப் பாடலை நானும் கேட்க நேர்ந்தது. என்னத்தச் சொல்ல... டி.எம்.எஸ்ஸின் அந்தப் பாடல் போல பல பாடல்கள் மனதில் ரீங்கரீத்துக் கொண்டிருந்தாலும் வார்த்தையாக்குகையில் சரியாக எழுத வருவதில்லை எனக்கு. மன்னிக்க. திருத்தியதற்கும் நல்ல கருத்திட்டமைக்கும் என் மனம் நிறைய நன்றி!

      Delete
  6. சிவாஜிக்கு அமைந்த பாடல்கள் எல்லாம் உணர்ச்சிபூர்வமானவை..இசைக்கு என்றும் மரணமில்லை..

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரி நண்பா. தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  7. என்ன ஒரு குரல் வளம் அவருக்கு.... எம்ஜிஆர், சிவாஜி என இருவருக்கும் இரு வேறு குரல்களில் பாடுவது பற்றி அவரே சொன்னதை ஒரு முறை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்......

    அவர் இல்லை எனிலும், அவரது குரல் என்றென்றும் நிலைத்திருக்கும்......

    மறைந்த திரு டி.எம்.எஸ். அவர்களது ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்.

    ReplyDelete
    Replies
    1. அவரின் ஆன்மாவிற்காய் பிரார்த்தனை செய்யும் உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  8. உடல் மறைந்தாலும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும்
    திரு டி.எம்.எஸ். அவர்களது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்..!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  9. வாழ்வாங்கு வாழ்ந்தே, மறைந்தாலும், இன்னும் வாழ்வார் இசை என்ற நாதம் இருக்கும் வரை!

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் ஐயா. மிக்க நன்றி!

      Delete
  10. Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  11. கண்ணதாசன் பாட்டு எழுத, டி.எம்.எஸ் அந்த பாடல்களுக்கு உயிர் கொடுக்க, எம்.ஜி.ஆர் - சிவாஜி உருவம் கொடுக்க - வசந்த காலம் சார் அது. அந்த வசந்த காலத்தில் நான் பிறக்கவில்லை என்று பல முறை ஏங்கியதுண்டு.

    //எம்.பி.3யாக இவை கிடைக்குமா என்று தேடிக் கொண்டும்தான் இருக்கிறேன்.// என்னிடம் mp3 வடிவத்தில் சில பாடல்கள் உள்ளன, அடுத்த சந்திப்பில் பகிர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இந்த வார இறுதியில சந்திச்சிரலாம் ரூபக்! அந்த வசந்த காலததில் நான் இருந்திருக்கிறேன் என்பதில் மகிழ்வு எனக்கு. மிக்க நன்றி!

      Delete
  12. அவரின் குரல் சாகா வரம் பெற்றது உங்கள் பதிவு மூலம் அவரின் குரலை மீண்டும் நினைவுபடுத்துகிறோம் நன்றி பாலா சார்

    ReplyDelete
    Replies
    1. இணையற்ற அவரின் குரலை நினைவுகூர்ந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete

  13. நல்ல பதிவு சார். TMS பற்றி நானும் ஒரு பதிவு எழுதலாம் என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எழுதுங்கள் சிவா. உங்கள் பாணியில் படிக்க எனக்கும் ஆவல். மிக்க நன்றி!

      Delete
  14. இசை இருக்கும் வரை ரசிக்கும் இதயங்கள் இருக்கும் வரை வாழ்வாங்கு வாழ்வார் அற்புதமான குரலுக்கு சொந்தமானவர்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தென்றல்! உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  15. Replies
    1. மிக்க நன்றி நண்பரே!

      Delete
  16. உண்மைதான் சகோ!...
    இசைக்கு ஏது அழிவு. அதனிலும் டி எம் எஸ் தனது காந்தகுரலில் குழைத்து இழைத்துத் தந்த அரிய கானங்கள், எத்தனை தலைமுறையினரென்றாலும் திரும்பத்திரும்பக் கேட்க வைக்கும் ஈர்ப்புசக்தி உள்ளவரை அவருக்கும் அவரின் பாடல்களுக்கும் மறைவென்பது இல்லவே இல்லை.

    உங்கள் நினைவுப்பதிவு அருமை. பகிர்விற்கு மிக்க நன்றி சகோ!

    த ம. 7

    ReplyDelete
    Replies
    1. நினைவுப் பகிர்வை ஆமோதித்த உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி!

      Delete
  17. டி.எம். எஸ். பற்றி சிறப்பான பதிவு சார்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே!

      Delete
  18. மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

    ReplyDelete
    Replies
    1. ஆம்! மனதை விட்டு நீங்காதவர்தான்! மிக்க நன்றி தோழி!

      Delete
  19. அவர் பாடல்களைக் கேட்காத காதுகளே இருக்காது என்பது நிச்சயம்! மண்ணானாலும் ஏற்கெனவே உலக சினிமா ரசிகன் திருத்தி விட்டார். டி எம் எஸ் ஒரு படத்துக்கு இசையமைத்திருக்கிறார். பலப்பரீட்சை என்று பெயர். அருணகிரிநாதர் பாடலை அந்நாளில் வேறு எந்தப் பாடகரும் தன்னால் பாட முடியாது என்று சொன்னார்களாம்.

    ReplyDelete
    Replies
    1. அவர் இசையமைத்தார் என்பது புதுத் தகவல் எனக்கு. உச்சரிப்பு சுத்தமான பாடகர்கள் இருந்த அந்நாளிலேயே பாட முடியாது என்று சொன்னார்ளென்றால் இப்போது...? ஹும்! மிக்க நன்றி!

      Delete
  20. அருணகிரிநாதர் பாடலை நேற்று சண்நியுஸில் போட்ட பொழுது தான் டிஎம்எஸ் குரல் என்று அறிந்து கொண்டேன்

    வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞன்...

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் சீனு. மிக்க நன்றி!

      Delete
  21. அந்த கம்பீரமான குரலுக்கு மயங்காத மனங்கள் ஏது?
    திரை இசை மட்டுமல்லாது பக்திப் பாடல்களில் கொட்கட்டிப் பறந்தவர் அவர். அவற்றில் பல அவரே இசை அமைத்தது என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கம்பீரக் குரலை ரசித்த முரளிக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  22. ''..பலப்பல வானொலிகளிலும், தொலைக்காட்சியிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும் வரை அவருக்கு மரணமில்லை ...'''
    மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. ஆம் வேதா மேடம்! உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  23. அவர் அழிந்து காற்றில் கலந்தாலும் அந்தக்குரல் இனியும் காற்றலைகளில் கலந்து வரும் வானொலி ஊடாக என்பதில் எந்த சந்தேகமும் இல்லை இன்னும் வாழ்வார் இனியும் வாழ்வார்!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் தம்பி! மிக்க நன்றி!

      Delete
  24. சொல்லில் உயிரைக் கலந்து பாடிய அந்த அற்புதக் கலைஞனுக்கு ஓர் நினைவஞ்சலியை, அவரது குரலிலேயே தந்து விட்டீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. நினைவஞசலியில் பங்கெடு்தத தங்களுக்கு என் மனம் நிறைய நன்றி ஐயா!

      Delete
  25. எல்லோரும் ரசித்த T.M.S.! சிறப்பானதொரு அஞ்சலிப் பதிவு.

    ReplyDelete
  26. மிக அருமையான இசை மேதைக்கு நல்லதொரு அஞ்சலிப் பதிவு! உலகம் உள்ளவரை டி.எம்.எஸ்ஸும் வாழ்வார் மக்கள் உள்ளங்களில்!

    ReplyDelete
  27. சிம்மக்குரலோனைப் பற்றிய சிறப்பான பதிவு ...!

    ReplyDelete
  28. நாம் ரசித்த டி .எம்.எஸ் என்றே தலைப்பு வைத்திருக்கலாம் சார்
    பாடல்களின் ரசிகனான நான் அவரது பாடல்களில் மெய் மறந்திருக்கிறேன்

    நான் எப்போதும் விரும்பி ரசிக்கும் ஒரு பாடல் மதன மாளிகையில் ....

    ReplyDelete
  29. அவரது கம்பீரமான குரலும் தெளிவான அழுத்தந்திருதமான உச்சரிப்பும் நடிகர்களிற்கேற்ப குரலை மாற்றிப் பாடும் ஆற்றலும் அவரை மற்றைய பாடகர்களிடமிருந்து அவரை தனித்துக் காட்டும்.தமிழ் சினிமாவின் தலைசிறந்த பாடகர் ரி.எம்.எஸ் அவர்களே.அவர் தன் பாடல்களின் வடிவில் எப்போதும் எம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார்

    ReplyDelete
  30. தமிழ் இனிக்கும் சிலர் பேசினால் தமிழ் மிளிரும் சிலர் பாடினால் டி எம் எஸ் தமிழை தன் குரலால் மிளிரவைத்தவர் அவரைப்பற்றிய பதிவும் மிளிர்கிறது இனிக்கிறது கணேஷ்..

    ReplyDelete
  31. டிஎம்எஸ் அவர்களின் குரலில் 'ஆடாத மனமும் உண்டோ' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இவர் உச்சஸ்தாயியில் பாட, திருமதி எம்எல்வி கீழ்ஸ்தாயியில் பாட காதுகளுக்கு விருந்து அந்தப் பாடல். (காணொளியும் அருமையாக இருக்கும்)

    அவரது பாடல்கள் மூலம் என்றென்றும் அவர் தமிழ் நெஞ்சங்களில் நிறைந்து இருப்பார்.

    ReplyDelete
  32. நல்ல மனம். நல்ல குரல் வளம்.
    அவருக்குக்கான அஞ்சலிப் பதிவு
    தகவல்கள் அருமை.
    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube